தமிழகம்

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி தீவிரம்: இம்மாத இறுதிக்குள் தயாராகும்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி தீவிரம் அடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இங்கு இதுவரை 60-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.

இதில் 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் இடையே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையடுத்து, அதிக வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுதவிர, அம்ரித் பாரத் (சாதாரண வந்தே பாரத்)ரயில், வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக, மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய முதல் வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த சில மாதங்களாக முழுவீச்சில் நடந்து வருகிறது.

இப்பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் குறுகியதூரத்துக்கு இயக்கும் வகையிலான வந்தே மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி 80 சதவீதம் முடிந்துள்ளது.

இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடித்து, ரயில்வே வாரியத்திடம் வந்தே மெட்ரோரயிலை ஒப்படைக்க உள்ளோம். குளிர்சாதன வசதி, பயணிகளை கவரும் உள்அலங்காரம், சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறும். தேவைக்கு ஏற்ப, 8 முதல் 12 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 100பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும் என்றனர்.

SCROLL FOR NEXT