பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி பட்டாளம்மன் கோயிலில் தனது கட்சியின் சின்னமான குக்கருடன் சுவாமி தரிசனம் செய்த தேனி தொகுதி அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன். படம்: நா.தங்கரத்தினம் 
தமிழகம்

“ஆர்.கே.நகர் போல...” - தேனி அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் நம்பிக்கை பிரச்சாரம்

செய்திப்பிரிவு

பெரியகுளம்: ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த போது இத்தொகுதிக்கு நான் செய்த பணிகள் இன்னமும் மக்களால் நினைவுகூரப்படுகிறது. அன்று செய்த வளர்ச்சிப் பணிகள் இத்தேர்தலில் எனக்கு வெற்றியைப் பெற்றுத் தரும் என்று தேனியில் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தேனி, திருச்சி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிடுகிறது. இதன்படி தேனியில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும், திருச்சியில் செந்தில் நாதனும் போட்டியிடுகின்றனர். அதற்கான அறிவிப்பை டி.டி.வி.தினகரன் நேற்று வெளியிட்டார். பின்னர், தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜி.கல்லுப் பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி னார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற வைத்தது போல், தற்போது இங்கும் என்னை மக்கள் வெற்றி பெற வைக்க வேண்டும். ஜெயலலிதா இருந்த போது உங்களுக்கான திட்டங்களை அவரிடம் கூறி எப்படி பெற்றுத் தந்தேனோ, அதே போல் அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடியிடம் கூறி பெற்றுத் தருவேன்.

கடந்த காலங்களில் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர்போல் நான் செயல்பட்டேன். அதே போல மீண்டும் உங்களுக்காக உழைக்க இம்முறையும் வெற்றி பெறச் செய்யுங்கள். இத்தொகுதியில் நான் முன்பு எம்.பி.யாக இருந்த போது செய்த பணிகள் இன்னமும் மக்களால் நினைவுகூரப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர் விவரம்: டி.டி.வி.தினகரன் ( 61 ), திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டியைச் சேர்ந்தவர். சிவில் இன்ஜினீயரிங் படித்துள்ளார். மனைவி அனு ராதா, மகள் ஜெய ஹரிணி ( திருமணமானவர் ). அதிமுக பொருளாளராக பதவி வகித்த டி.டி.வி.தினகரன். 1999-ம் ஆண்டு பெரிய குளம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2004 மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு அதிமுகவிலிருந்து நீக்கப் பட்டார். அதன் பின்பு 2017-ம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2018-ல் அமமுக கட்சியை தொடங்கினார்.

SCROLL FOR NEXT