மார்த்தாண்டத்தில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசினார் 
தமிழகம்

“முழு நேரம் பணியாற்றுபவரை குமரி எம்பியாக தேர்ந்தெடுங்கள்” - பொன்.ராதாகிருஷ்ணன்

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி தொகுதியில் முழு நேரம் திட்டங்களை செயல்படுத்துபவரை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுங்கள் என்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி பாஜக பொறுப்பாளர்கள் கூட்டம் மார்த்தாண்டத்தில் நேற்று நடைபெற்றது கூட்டத்தில் எம்ஆர்.காந்தி எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தர்மராஜ், விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி பாஜக வேட்பாளர் நந்தினி, மாநில செயலாளர் மீனாதேவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் குமரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன் பேசியதாவது: குமரி மாவட்டத்துக்கு நான்கு வழிச்சாலை உட்பட 48ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மத்திய அரசு வழங்கி உள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்த தண்ணீர், மண் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி கொடுக்காமல் மாநில அரசு கோட்டை விட்டது. இவற்றை சீர் செய்ய தற்போதைய மக்களவை உறுப்பினருக்கு முடியாது.

ஏனென்றால் அவர் பார்ட் டைம் ( பகுதி நேர ) எம்.பி. எனவே, முழு நேரமும் திட்டங்களை செயல்படுத்துபவரை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுங்கள். இது போல் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடை தேர்தலிலும் முடிவெடுங்கள். இரு தேர்தலிலும் பாஜக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுங்கள். இதற்கு பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகளை சேகரிக்கவேண்டும் என்றார். கூட்டத்தில் மாற்று கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

SCROLL FOR NEXT