தமிழகம்

மயிலாடுதுறை, நெல்லை காங்கிரஸ் வேட்பாளர் யார்? - இழுபறியின் பின்னணி

நிவேதா தனிமொழி

மார்ச் 23-ம் தேதி மாலை காங்கிரஸ் கட்சி தங்களின் 4-வது வேட்பாளை பட்டியலை வெளியிட்டிருந்தது. மொத்தமாக 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அதில் தமிழகத்தில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மயிலாடுதுறை, நெல்லை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வில் இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் அறிவித்துள்ள 7 வேட்பாளர்களில், தற்போது எம்பியாக உள்ள 4 பேருக்கு அவரவர் தொகுதியிலும், ஒருவருக்கு வேறு தொகுதியிலும் என 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை தொகுதி வேட்பாளராக மீண்டும் கார்த்தி சிதம்பரம் களமிறக்கப்பட்டுள்ளார். 2019-இல் வெற்றியை வசப்படுத்திய கார்த்தி சிதம்பரம், 3-வது முறையாக களம் காண்கிறார்.

கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ராகுல் காந்தியின் நம்பிக்கையைப் பெற்ற ஜோதிமணி, தனக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.

கடந்த முறை ஆரணி தொகுதி எம்பியாக இருந்த விஷ்ணு பிரசாத்திற்கு, இந்த முறை கடலூரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆரணி தொகுதி திமுக வசம் சென்றதையடுத்து, தொகுதி மாறி அவர் போட்டியிடுகிறார்.

திருவள்ளூர் தொகுதியில், எம்பியாக இருந்த ஜெயக்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டு, காங்கிரஸ் வார் ரூம் குழு தலைவரான சசிகாந்த் செந்தில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். விருப்ப ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில், கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போது வார் ரூம் பணிகளை மேற்கொண்டவர். அந்தப் பணிகளால் பிரபலமானார்.

இதேபோல, கிருஷ்ணகிரியில் செல்லக்குமார் எம்பிக்குப் பதிலாக, இந்த முறை முன்னாள் எம்.எல்.ஏ கோபிநாத்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

இழுபறியாகும் மயிலாடுதுறை, நெல்லை! - மயிலாடுதுறையில் களமிறங்க கடுமையான போட்டி நிலவுகிறது. இதில் ராகுல் காந்திக்கு நெருக்கமான பிரவீன் சக்கரவர்த்தி, கடந்த முறை திருச்சி தொகுதியில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் முயற்சி செய்வது வருகிறார்கள். மேலும் சிலரும் இத்தொகுதியில் களம் காண தொடர்ந்து மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், பிரவீன் சக்கரவர்த்திக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதேபோல், திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸார் பலர் போட்டி போட விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில், தற்போது மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் பீட்டர் அல்வோன்ஸுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த இரு தொகுதிகள் உள்ளடக்கிய பட்டியல் விரைவில் வெளிவரலாம் என சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT