கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கோவை மக்களவைத் தொகுதியில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்கு, சூலூர்,கவுண்டம்பாளையம், பல்லடம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு 20.83 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூ. 5 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூ. 3 முறையும், திமுக 2 முறையும், பாஜக 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
தற்போதைய தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதியின் வேட்பாளர்களாக திமுக கூட்டணி சார்பில் கணபதி ப.ராஜ்குமார், அதிமுக கூட்டணி சார்பில் சிங்கை ஜி.ராமச்சந்திரன், பாஜக கூட்டணி சார்பில் அதன் மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் சார்பில் கலாமணி ஜெகநாதன் ஆகியோர் களம் காண்கின்றனர். திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட தினத்திலேயே, அவரது பெயரை சுவர் விளம்பரங்களில் எழுதி அக்கட்சியினர் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
அதற்கு மறுநாள், பொறுப்பு அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடத்தியும், சட்டப்பேரவை வாரியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தியும் திமுக வேட்பாளர்ராஜ்குமார் தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். வீடு வீடாக திண்ணைப் பிரச்சாரத்தையும் அவர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் வேட்பாளர்அறிமுகக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. அதன் வாயிலாக, வேட்பாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் தனது பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி என்பதால், அவரது பிரிவினர் சமூகவலைதளங்களில் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாஜக சார்பில், மாநில தலைவர் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பிரதமர் மோடிஅவருக்காக கோவையில் வாகனப்பேரணி நடத்தினார். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், சித்தாபுதூர் ஐயப்பன் கோயிலில் நேற்றுஅண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். ஐயப்பன் சன்னதி முன்பு விளக்கேற்றி வழிபாடு செய்த பின்னர் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
மற்ற கட்சிகளுக்கு முன்னோடியாக நாம் தமிழர் கட்சியின் கோவை மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கலாமணி ஜெகநாதன், கட்சியின் துண்டறிக்கைகளை வீடு வீடாக வழங்கி பிரச்சாரம் செய்துவருகிறார். அரசியல் கட்சி வேட்பாளர்களின் மனுதாக்கலுக்கு பின்னர் பிரச்சாரம் மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது