புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் போட்டியிட மாநில அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய அவசியமில்லை; சட்டமும் அப்படி சொல்லவில்லை என்று பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாஜக வேட்பாளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு தேர்தலை சந்திப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் இதுபற்றி கூறியதாவது: ''உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி சட்டமும் சொல்லவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு தான் தேர்தலை சந்திக்கிறேன். என் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. முதல்வராக இருந்துதான் நாராயணசாமி தேர்தலை சந்தித்தார். தேர்தல் தோல்வி பயத்தால் எதிர்கட்சியினர் என்னை பதவி விலக கூறுகிறார்கள்'' என்று குறிப்பிட்டார்.