மேட்டூர்: சேலம் மாவட்டம் பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்து, சேலம் மக்களவை வேட்பாளரை ஆதரித்து நடந்து சென்று துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வேட்பாளரையும் அறிவித்துள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக நேரடியாக 33 வேட்பாளர்களுடன் களம் இறங்குகிறது. அதிமுக திமுகவுடன் 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது. இந்த நிலையில் திருச்சியில் இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் திருக்கோவியில் சிறப்பு வழிபாடு நடத்தி தேர்தல் பிரச்சாரத்தை ஞாயிறு காலை தொடங்கினார். சிறப்பு பூஜையில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பரிவட்டத்துடன் பூரண கும்பம் மரியாதை கொடுக்கப்பட்டது. பின்னர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மக்களவை வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அப்பகுதியில் நடந்து சென்று, மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்து ஆதரவை தெரிவித்தனர்.
முன்னதாக, கோயிலுக்கு வருகை தந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சிறப்பு பூஜை மற்றும் வாக்கு சேகரிப்பில் அமைப்புச் செயலாளர் செம்மலை, மாவட்டச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடாசலம், எம்எல்ஏக்கள் மணி பாலசுப்ரமணியம் சித்ரா மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது சென்றாய பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பாக சென்றாய பெருமாள் திருக்கோயிலுக்கு வருகை தந்து வழிபாடு நடத்துவதை எடப்பாடி பழனிசாமி வழக்கமாக கொண்டுள்ளனர்.
கடந்த 2019-ம் ஆண்டு சேலம் மாவட்டம் கருமந்துறை வெற்றி விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்து மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அந்த தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. ஆனால், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.