கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக தலைமையிலான தேசியஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
தமிழகத்தை ஆளும் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக 9 கட்சிகளுடன் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. பாஜக 19 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 1996 மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் போட்டியிட்ட பிறகு, தற்போது அதிகபட்சமாக 23 தொகுதிகளில் 'தாமரை' சின்னம் களத்தில் உள்ளது. மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக கோட்டையான கோவையில் போட்டியிடுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.
இந்த 39 பேரும் மோடி பிரதமராக கிடைக்கப்போகும் 400-க்கும் அதிகமான எம்பி-க்களில் ஒருவராக இருக்கப் போகிறார்கள். மீண்டும் மோடி தான் பிரதமர் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. தேர்தல் முடிவுகள் தெரிந்த பிறகு நடக்கும் தேர்தல் இது. எனவே, தமிழக மக்கள் பிரதமர் மோடிக்கே வாக்களிப்பார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெறப்போகும் வெற்றி 1967-ல் ஏற்பட்டதைப் போல பெரும் அரசியல் மாற்றத்திற்கு வித்திடும் என்பதில் சந்தேகம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.