தமிழகம்

கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் தடத்தில் சென்னை மெட்ரோ சுரங்கப் பாதை பணிகள் தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான ( 26.1 கி.மீ. ) 4-வது வழித்தடம் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப் பாதையாகவும், பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்ட பாதையாகவும் அமைக்கப்படுகிறது.

இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம் பெற உள்ளன. தற்போது உயர்மட்ட, சுரங்கப் பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் வேகமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் - கோடம்பாக்கம் மேம்பாலம் வரையிலான தடத்தில் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இது குறித்து சென்னை மெட்ரோரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித் தடத்தில் ஒரு பகுதியாக சென்னை மெரினாவில் இருந்து சுரங்கப் பாதை பணி கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் சுரங்கப்பாதை பணிக்கு தற்போது 3 இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

140 மீட்டர் நீளத்துக்கு...: தற்போது, மெரினா கடற்கரையில் இருந்து தொடங்கி, 140 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டும் பணி நிறைவடை ந்துள்ளது. கலங்கரை விளக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தின் மேற்கூரை மற்றும் அடித்தள அடுக்கு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கலங்கரை விளக்கத்தில் சுரங்கம் தோண்டும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT