டிடி மருத்துவக் கல்லூரி மாணவர் களுடன் தமிழக அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தங்களை மீண்டும் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரியதை ஏற்க அரசுத் தரப்பு மறுத்துவிட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வந்த டிடி மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை இந்திய மருத்துவ கவுன்சில் ரத்து செய்தது. இதனால் அங்கு படித்துவந்த 2011-12 மற்றும் 2012-13ம் ஆண்டு மாணவ, மாணவிகள் 216 பேர் பாதிக்கப்பட்டனர். தங்களை வேறொரு மருத்துவக் கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது டிடி மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மாணவ, மாணவிகள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
கல்லூரி விவகாரம் தொடர்பாக சட்டப் பேரவைக் கூட்டத்தொடரில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறி சுகாதாரத் துறை அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டனர். சமீபத் தில் கிண்டியில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு ஆர்ப் பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் சென்னை தலை மைச் செயலகத்தில் டிடி மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடந்தது. அரசு தரப்பில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் கலந்துகொண்டனர். டிடி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.
காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை மாலை 4 மணி வரை நீடித்தது. ஆனாலும், உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது.
இதுகுறித்து, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட மாணவர் சதீஷ் கூறியதாவது: ‑டிடி மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால், 216 மாணவ, மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. எங்களை எம்பிபிஎஸ் படிக்க ஏற்பாடு செய்யுங் கள் என கூறினோம். ‘எம்பிபிஎஸ் படிக்க ஏற்பாடு செய்ய முடியாது. கலை, அறிவியல் அல்லது வேறு ஏதாவது மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க ஏற்பாடு செய்ய லாம்’ என பேச்சுவார்த்தையில் அமைச் சர்கள் கூறினர். நாங்கள் ஒப்புக்கொள்ள வில்லை. மாணவ, மாணவிகளுடன் கலந்துபேசி, அடுத்தகட்டமாக என்ன செய்வது என முடிவெடுப்போம்.
இவ்வாறு அந்த மாணவர் தெரிவித்தார்.