தமிழகம்

திருவள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் - யார் இந்த சசிகாந்த் செந்தில்? 

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவை தேர்தல் 2024ல் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு முன்னாள் ஐஏஸ் அதிகாரியான சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள இந்த 4வது பட்டியலில், மொத்தம் 45 வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில் தமிழகத்தில் ஏழு தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

திருவள்ளூர் (தனி) தொகுதியில் சசிகாந்த் செந்தில், கிருஷ்ணகிரியில் கே.கோபிநாத், கரூரில் ஜோதிமணி, கடலூரில் எம்.கே.விஷ்ணு பிரசாத், சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம், விருதுநகரில் மாணிக்கம் தாகூர், கன்னியாகுமரியில் விஜய் வசந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவருமான சசிகாந்த் செந்திலின் பெயர் தமிழக காங். வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

யார் இந்த சசிகாந்த் செந்தில்? - சசிகாந்த் செந்தில் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரி. தன் பணிக்காலத்தில் அவர் கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். இது தவிர பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2019 செப்டம்பரில் தனது பணியை ராஜினாமா செய்த சசிகாந்த் செந்தில், “தேசத்தை கட்டமைக்கும் அடிப்படை அமைப்புகள் சிதைக்கப்படுகின்றன. அவற்றை காப்பாற்ற வேண்டும்’ என்ற காரணத்தை முன்வைத்திருந்தார். பின்னர் தமிழக காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சமூகவலைதளப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை பாஜக சார்பில் தேர்தல் களப்பணிக்காக அனுப்பப்பட்ட அதே வேளையில், காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டார் சசிகாந்த் செந்தில். கட்சியின் கட்டளையை ஏற்று கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கான பணியை கையில் எடுத்தார். அதை திறம்பட செய்து முடிக்கவும் செய்தார்.

மேலும் கர்நாடகாவில் ஹிஜாப் தடை விவகாரம், ஊழல் விவகாரம், முஸ்லிம்களுக்கான 4 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து விவகாரம் என பல்வேறு முக்கியப் பிரச்சினைகளில் தனது குரலை சமூக வலைதளங்களில் அழுத்தமாக பதிவு செய்தார். அவை அனைத்துமே பரவலாக கவனம் பெற்றன. அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் ‘சென்ட்ரல் வார் ரூம்’ தலைவராகவும் சசிகாந்த் நியமிக்கப்பட்டார்.

கட்சி மேலிடத்தில் பெற்ற நன்மதிப்பு காரணமாக தமிழ்நாடு காங்கிரஸின் தலைவராக சசிகாந்த் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்த நிலையில், சமீபத்தில் செல்வப்பெருந்தகைக்கு அப்பதவி வழங்கப்பட்டது.

இந்த சூழலில், அடுத்த மாதம் நடக்க இருக்கும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருவள்ளூர் (தனி) தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சசிகாந்த் செந்திலுக்கு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT