அன்று அப்பா குமரி ஆனந்தன் தன்னுடைய தாத்தா சுந்தரத்தின் ‘சீட்’டை பறித்தார். அவரின் மகளான தமிழிசை இப்போது பேரன் எஸ்.ஜி.சூர்யாவின் ‘சீட்’டை கைப்பற்றியுள்ளார். ஆகவே, எஸ்.ஜி சூர்யா தனக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்த்த களம் இப்போது தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் பின்னணி என்ன?
கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாஜக தங்களின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. அதில், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். அதில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னையில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த வாரத்தில் தன் ஆளுநர் பதவியை தமிழிசை ராஜினாமா செய்துவிட்டு, மக்களவைத் தேர்தலில் களமிறங்குவதாக அறிவித்தார். அப்போதிலில் இருந்து அவர் தென் சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி அல்லது திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடலாம் எனச் சொல்லப்பட்டது. இந்த நிலையில், தென் சென்னை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், தென் சென்னை தொகுதியில் யார் களமிறக்கப்படலாம் என பாஜக மேலிடத்துக்கு வழங்கியிருந்த உத்தேசப் பட்டியலில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா பெயர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், தென் சென்னை தமிழிசைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தென் சென்னை தொகுதியில் கடந்த சில ஆண்டுகளாகவே களப்பணிகள் செய்து வந்த எஸ்.ஜி.சூர்யாவுக்கு சீட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அது தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளதை சிலர் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். காரணம், இந்த வேட்பாளர் மாற்றம் இவர்களிடம் தொடங்கியது அல்ல. இந்த மாற்றம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அது என்ன, எப்படி நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள 47 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும்.
1977-ஆம் ஆண்டு, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. அதில், ஜனதா கட்சியும், குமரி ஆனந்தன் தலைமையிலான காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்திருந்தது. அந்தத் தேர்தலில் ரிஷிவந்தியம் தொகுதியில் ஜனதா கட்சியைச் சேர்ந்த திருக்கோவிலூர் சுந்தரத்துக்கு வாய்ப்பு கிடைக்கும் என பரவலாகப் பேசப்பட்டது. அவரும் அதற்கான பணிகளைத் தீவிரமாக செய்ய தொடங்கிவிட்டார்.
அந்த நிலையில்தான், கூட்டணியில் இருந்த காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. அக்கட்சி சார்பாக ஜெயசந்திரனை குமரி ஆனந்தன் களமிறக்கினார். தனக்கு கிடைக்க இருந்த வாய்ப்பு தவறினாலும், கூட்டணி கட்சியில் போட்டியிட்ட குமரி ஆனந்தனின் கட்சி வேட்பாளரை வெற்றிக்காக அயராது உழைத்தார் திருக்கோவிலூர் சுந்தரம்.
குமரி ஆனந்தன் மகள் தான் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். திருக்கோவிலூர் சுந்தரத்தின் பேரன்தான் பாஜக மாநில செயலாளர் டாகடர் எஸ்.ஜி.சூர்யா. தற்போது தென் சென்னை மக்களவையில் போட்டியிட சூர்யாவுக்கு கிடைக்கவிருந்த வாய்ப்பை தமிழிசைப் பெற்றிருக்கிறார். கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு தன் தாத்தாவுக்கு நடந்த அதே சம்பவம் அவரின் பேரனான எஸ்.ஜி.சூர்யாவுக்கு நடந்திருப்பது சற்றே ஆச்சரியமாக இருப்பதாக அக்கட்சி வாட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகே, அடுத்த தேர்தலில் எம்.பி சீட் வாங்கிவிட வேண்டுமென அத்தொகுதியில் பல வேலைகளைச் செய்தார் எஸ்.ஜி.சூர்யா. குறிப்பாக, கொரோனா, வெள்ளம் போன்ற இடர்பாடுகளில் தென் சென்னை மக்களோடு இணைந்து தொகுதியில் செயல்பட்டார். இதனால், தென் சென்னையில் பாஜக முகமாகப் பார்க்கப்பட்டார். இந்தத் தொகுதியில் எஸ்.ஜி செயல்பாடுகள் காரணமாகவே பாஜக கட்சி நல்ல வளர்ச்சியடைந்திருந்து. இதனால் 2024-ம் ஆண்டு மக்களவையில், இவருக்குத்தான் தென் சென்னை சீட் என உறுதியாகியிருந்தது. ஆனால், அது தமிழிசை கைகளுக்கு சென்றுள்ளது.
அன்று அப்பா குமரி ஆனந்தன் தன்னுடைய தாத்தா சுந்தரத்தின் சீட்டைப் பறித்தார். அவரின் மகளான தமிழிசை பேரன் எஸ்.ஜி சூர்யா சீட்டைக் கைப்பற்றியுள்ளார். ஆகவே, சூர்யா தனக்கு கிடைக்கும் என எதிர்ப்பார்த்த களம் தமிழிசைக்கு வழங்கப்பட்டுள்ளது. தன்னுடைய தாத்தா செய்தது போலவே பாஜக வேட்பாளரான தமிழிசையை வெல்ல களப்பணியை எஸ்.ஜி சூர்யா செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கு காலம்தான் பதில் சொல்லும் என்கிறார்கள் பாஜகவினர்.