தஞ்சாவூர்: தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுகவும்- பாஜகவும் 2-வது முறையாக நேரடியாக மோதுகின்றன. தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ச.முரசொலி போட்டியிடுகிறார். இவர் தேர்தலுக்கு புதிய முகமாக இருந்தாலும், திமுக குடும்ப பின்னணியை கொண்டவர்.
பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரான கருப்பு எம்.முருகானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். 2014 மக்களவைத் தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இந்த முறை மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட கடந்த சில மாதங்களாக அதற்கான முன்னெடுப்பு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கட்சி சார்பில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட முன்னாள் அவைத் தலைவர் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். இவர் 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.
அதேபோல, நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். இவர் சட்டப்பேரவைத் தேர்தலில் 2016-ல் பாபநாசம் தொகுதியிலும், 2021-ல் அறந்தாங்கி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளதால், பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தத் தொகுதியில் 2014 மக்களவைத் தொகுதியில் திமுகவும்-பாஜகவும் நேரடியாக மோதிய நிலையில், தற்போது 2-வது முறையாக இருகட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.