சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியில் தேவநாதன் யாதவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பாஜகவுக்கு சாதகமான 9 தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்றாக அக்கட்சியினர் கருதுகின்றனர்.
பாஜக சார்பில் மேப்பல் சக்தி, தொகுதி பொறுப்பாளர் அர்ஜூனமூர்த்தி உள்ளிட்டோர் தங்களுக்கு `சீட்' கேட்டு காய் நகர்த்தி வந்தனர். அதே சமயத்தில் பாஜகவுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தி.தேவநாதன் யாதவ் ராமநாதபுரம் தொகுதிக்கு காய் நகர்த்தி வந்தார்.
இவர் ஏற்கெனவே 2016-ம் ஆண்டு தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டப்பேரவை தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு 11,842 வாக்குகள் பெற்றார். இதனால் தனக்கு எப்படியும் ராமநாதபுரம் தொகுதி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
இதனிடையே அமமுகவுக்கு தேனியை ஒதுக்கியதால், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியை விரும்பினார். இதனால் ஓபிஎஸ்-க்கு ராமநாதபுரம் ஒதுக்கியதால் கடைசி நேரத்தில் சிவகங்கை தொகுதி தேவநாதன் யாதவுக்கு வழங்கப்பட்டது. மேலும் அவர் பாஜகவின் தாமரைச் சின்னத்திலேயே போட்டியிடுகிறார்.
சென்னையைச் சேர்ந்த தேவநாதன் யாதவ் (62) எம்ஏ பிஹெச்டி முடித்துள்ளார். யாதவ மகாசபை தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.
பல்வேறு விளையாட்டு அமைப்பு களிலும் பொறுப்பாளராக உள்ளார். இவருக்கு மனைவி மீனாட்சி, மகன் கரிஷ்மா மருத்துவராகவும், மகள் ஹரிணி வழக்கறிஞராகவும் உள்ளனர்.
இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் கட்சித் தலைமை யாரை அறிவித்தாலும் நாங்கள் தேர்தல் பணி செய்யத் தயாராகவே இருந்தோம். இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைக்கவில்லை என்றாலும், ஏற்கெனவே பாஜக சார்பில் 1873 பூத்களுக்கும் 13 பேர் கொண்ட கமிட்டிகளை அமைத்துவிட்டோம் என்று கூறினர்