தமிழகம்

தேர்தல் செலவின விலைப் பட்டியல் நிர்ணயத்தில் குழப்பம்: கட்சிகள் புகாரும் காரணமும்

செய்திப்பிரிவு

சிவகங்கை: தேர்தல் செலவின விலைப்பட்டியல் நிர்ணயத்தில் குழப்பம் இருப்பதாக அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலையொட்டி வேட்பாளர்களின் செலவினங்களைக் கணக்கீடு செய்ய அந்தந்த மாவட்டங்களுக்கு ஏற்ப விலைப்பட்டியலை நிர்ணயித்து வெளியிட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட விலைப்பட்டியலில் சந்தை விலையை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டதாக அரசியல் கட்சிகள் புகார் தெரி வித்தனர்.

மேலும், மக்களவைத் தொகு திக்கு அதிகபட்சமாக ரூ.95 லட்சம் மட்டுமே ஒரு வேட்பாளர் செல வழிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், விலைப்பட்டியலில் பல பொருட்களுக்கு விலை அதிகமாக நிர்ணயித்துள்ளதால் வேட்பாளர்களின் செலவு கணக்கு அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. தப்பாட்டக் குழுவுக்கு ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினர் அதிகபட்சம் ரூ.10,000 முதல் ரூ.12,000 மட்டுமே வாங்குகின்றனர். அதிலும் அரசியல் கட்சிகள் அக்குழுவினரை சில மணி நேரம் மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதற்கு ரூ.25,000 விலை நிர்ணயித்துள்ளதால், அவர்களை அழைப்பதையே வேட்பாளர்கள் புறக்கணித்துவிடுவர்.

இதனால் அவர் களது வாழ்வாதாரம் பாதிக்கும். இதையடுத்து விலைப்பட்டியலை மாற்றியமைக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் மருது கூறியதாவது: தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட விலைப்பட்டியலில் பல பொருட்களின் விலை சந்தை, விலையைவிட கூடுதலாக நிர்ணயித்துள்ளனர். சாதாரணமாக டீ ரூ.10 முதல் ரூ.12 கிடைக்கிறது. ஆனால் ரூ.15 நிர்ணயித்துள்ளனர்.

மேலும் மொத்தமாக வாங்கும்போது அல்லது தயாரிக்கும்போது விலை மேலும் குறையும். அதேபோல் மட்டன் பிரியாணி ரூ.150 முதல் ரூ.180-க்கு கிடைக்கிறது. ஆனால் ரூ.200-ஆக நிர்ணயித்துள்ளனர். அதேபோல் சிக்கன் பிரியாணி ரூ.100 முதல் ரூ.120-க்கு கிடைக்கிறது. அதை ரூ.150-ஆக நிர்ணயித்துள்ளனர். சில பைசா செலவில் அனுப்பக்கூடிய மின்னஞ்சல், குறுஞ்செய்திக்குக்கூட ரூ.35 கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

நாடகக் கலைக்குழுவுக்கு (10 பேர்) ரூ.50,000, கரகாட்டத்துக்கு (10 பேர்) ரூ.40,000, ஒயிலாட்டத்துக்கு (12 பேர்) ரூ.30,000, இசைக் கச்சேரிக்கு (10 பேர்) ரூ.50,000, தப்பாட்டத்துக்கு (12 பேர்)ரூ.25,000 விலை நிர்ணயிக்கப்பட் டுள்ளது.

இது மிக அதிகம் என்பதால், அக்குழுவினரை அழைப்பதையே வேட்பாளர்கள் தவிர்த்துவிடுவர். இதனால், விலைப்பட்டியலைச் சந்தைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT