பாமக நிறுவனர் ராமதாஸுடன் இயக்குநர் தங்கர் பச்சான் 
தமிழகம்

பாமக வேட்பாளரானது எப்படி?- இயக்குநர் தங்கர் பச்சான் பேட்டி

செய்திப்பிரிவு

சென்னை: மக்களவைத் தேர்தலில் கடலூர் தொகுதி பாமக வேட்பாளராக களமிறங்கியுள்ள இயக்குநர் தங்கர் பச்சான் தான் அரசியலுக்குள் வந்தது எப்படி என்பதை விவரித்துள்ளார்.

கடலூர் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளராக இயக்குநர் தங்கர் பச்சான் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழில் வெளியான ‘அழகி’, ‘தென்றல்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் தங்கர் பச்சான். அண்மையில் அவர் பாரதிராஜாவை வைத்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தை இயக்கியிருந்தார். திரையுலகில் கவனம் செலுத்தி வந்த அவர் முதன்முறையாக தேர்தல் அரசியலில் ஈடுபட உள்ளார்.

இந்நிலையில் பாமகவில் வேட்பாளர் ஆனது எப்படி என்பதை இயக்குநர் தங்கர் பச்சான் வெளிப்படுத்தியுள்ளார். அதில், “37 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் இயங்கி வருகிறேன். என்னுடைய படைப்புகள் அனைத்தும் மக்கள் சார்ந்தவையே. மக்களின் வாழ்க்கையை மட்டுமே பதிவு செய்துள்ளேன். மக்களுக்கு துன்பங்கள் நேரும்போது வரும் முதல் குரல் என்னுடையதாகத்தான் இருக்கும். தானே புயல் வந்தபோது நான் எடுத்த ஆவணப்படம் மூலம் இழப்பீடு பெற்றுத்தந்தேன்.

எல்லா நேரங்களிலும், எல்லா போராட்டங்களிலும் கலந்துகொண்டு தான் இருக்கிறேன். ஆகவே கடலூர் மக்களுக்கு நான் புதியவன் கிடையாது. தேர்தலுக்காக கட்சிகளை பிடித்து வேட்பாளரானவன் நான் அல்ல. என்னுடைய மக்களை காப்பாற்றுவதற்காகவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் எதற்காக வந்துள்ளேன் என்பது மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.

வேட்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டது முதலில் எனக்கே தெரியாது. நள்ளிரவில் நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்னை அழைத்து, தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கட்சி தன் விருப்பத்தை வெளிப்படுத்தியது. சிந்திப்பதற்கு சிறிது நேரம் கேட்டேன். சிறிதுநேரத்தில் அவர்களிடம் பேசினேன். நான் கொடுத்து வரும் குரல்கள் கட்சிக்கு நன்றாகவே தெரிந்தது. எனவே, "இதுதான் சரியான நேரம். பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. செயலில் இறங்க வேண்டும்" என்று ராமதாஸ் வெளிப்படுத்தினார். அதன்பிறகே சம்மத்தித்தேன். இப்படித்தான் நான் வேட்பாளரானேன். எல்லாம் ஒருமணி நேரத்தில் எடுத்த முடிவு. ஒரு படப்பிடிப்புக்காக நான் லண்டன் சென்றிருந்தேன். அங்கு சென்றபோது இந்த அழைப்பு வந்தது. உடனடியாக கிளம்பி வந்துவிட்டேன்.” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT