கோப்புப்படம் 
தமிழகம்

கேஜ்ரிவால் கைது ஜனநாயக படுகொலை: முதல்வர் ஸ்டாலின் உட்பட தலைவர்கள் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் இரவு அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘‘மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், தனது 10 ஆண்டு ஆட்சியின் அவலங்களை நினைத்தும், தோல்வி உறுதியாகியுள்ளதாலும் அஞ்சி நடுங்கும் பாசிச பாஜக அரசு, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்து, அருவருக்கத்தக்க நிலைக்குத் தரம்தாழ்ந்துள்ளது.

ஒரே ஒரு பாஜக தலைவர் மீது கூட விசாரணையோ கைது நடவடிக்கையோ இல்லை என்பதில் இருந்தே அவர்களின் அதிகார அத்துமீறலும், ஜனநாயகச் சிதைப்பும் அப்பட்டமாகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான இத்தகைய தொடர் பழிவாங்கும் நடவடிக்கைகள், அவர்களை பாஜக அரசு குறிவைத்து வேட்டையாடுவதை வெட்டவெளிச்சம் ஆக்குகிறது.

இந்த கொடுங்கோன்மை பாஜகவின் முகத்திரையை முற்றிலுமாகக் கிழித்தெறிந்து மக்களிடம் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. ஆனால் இந்த கைது நடவடிக்கைகளால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. மாறாக, நாங்கள் மேலும் உறுதியடைகிறோம். ‘இண்டியா’ கூட்டணியின் வெற்றி உறுதியாகிறது. மக்களின் சினத்தை எதிர்கொள்ளத் தயாராக இரு பாஜகவே’’ என்று தெரிவித்துள்ளார்

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: அமலாக்கத் துறையின் இத்தகைய அடக்குமுறைகள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இண்டியா கூட்டணியில் அர்விந்த் கேஜ்ரிவால் சேர்ந்தது முதற்கொண்டு அவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே இந்தகைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் விரோத மோடி ஆட்சி விரைவில் அகற்றப்படும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்: ஒரு மாநிலத்தின் முதல்வரை, எதிர்க்கட்சி கூட்டணியின் முக்கியத் தலைவரை தேர்தல் நேரத்தில் அமலாக்கத் துறை கைது செய்திருப்பது ஏதேச்சதிகாரத்தின் வெளிப்பாடாகும்.

குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் அமலாக்கத் துறையின் நடவடிக்கையில் தலையிட்டு தடுக்க வேண்டும். தேர்தல் களத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு கிடைப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல்கள் அம்பலமாகி மக்கள் மத்தியில் வெளிவரும் நிலையில், அதனை திசை திருப்பும் நோக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து கைது நடவடிக்கைகள் தொடர்வதன் மூலம் தெளிவாகிறது. எனவே வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை படுதோல்வியடையச் செய்து மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.

SCROLL FOR NEXT