சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், கலங்கரைவிளக்கம் - பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியான கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான வழித்தடத்தில் உயர்மட்டப்பாதை பணிகள் பலஇடங்களில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குறிப்பிட்ட சில இடங்களில் தண்டவாளம் அமைப்பதில் தாமதம்காரணமாக, இர்கான் என்ற நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மேலும், ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளை விரைவுப் படுத்தவும் வலியுறுத்தியுள்ளது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான (26.1 கி.மீ.) 4-வது வழித்தடமும் ஒன்றாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரை உயர்மட்டபாதையாகவும் அமைக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் 9 சுரங்க மெட்ரோரயில் நிலையங்களும், 18 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் இடம்பெற உள்ளன. தற்போது, உயர்மட்ட, சுரங்கப்பாதை பணி, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி ஆகிய பணிகள் பல்வேறு இடங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
600 தூண்கள் அமைக்கும் பணி நிறைவு: குறிப்பாக, இந்த வழித்தடத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் - பூந்தமல்லி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தில் பணிகள்தீவிரமடைந்துள்ளன. இந்த பகுதியில் 600 தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. தூண்கள் அமைக்கப்பட்ட இடங்களில் உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
சில இடங்களில் உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டு, தொடர்ந்து ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப்பணி மெதுவாக நகர்வதால், இந்தப்பணிகளை மேற்கொள்ளும் இர்கான் என்ற நிறுவனத்துக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி எச்சரித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக கோடம்பாக்கம்-பூந்தமல்லி வரை வழித்தடத்தில், உயர்மட்டப்பாதையில் மொத்தம் 811 தூண்கள் அமைக்க வேண்டும்.இதுவரை 600-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. பூந்தமல்லி முதல் போரூர் வரை பெரும்பாலான இடங்களில் தூண்கள் அமைக்கப் பட்டு விட்டன. பல இடங்களில் அடுத்த கட்டப்பணிகள் நடைபெறுகின்றன.
ஆட்கள் பற்றாக்குறையால் தாமதம்: அதாவது பல இடங்களில் உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இங்குரயில் தண்டவாளம் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்த பணியை இர்கான்என்ற நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிறுவனம், ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை துணை ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்துள்ளது.
ஆட்கள் பற்றாக்குறையால் இப்பணி மெதுவாக செல்கிறது. இது எங்கள் கண்காணிப்பில் தெரியவந்தது. இது தொடர்பாக, அந்த நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியை வேகப்படுத்த தெரிவித்து இருக்கிறோம். ஒரு குறிப்பிட்ட நாட்கள் கால அவகாசம் கொடுத்து உள்ளோம். அதற்குள் பணியை வேகப்படுத்த வேண்டும். இல்லை எனில், அபராதம் விதிக்கப்படும்.
அந்த நிறுவனம், தண்டவாளம் அமைக்கும் பணியை மெதுவாக மேற்கொள்கிறது. இதை வேகப்படுத்த எச்சரிக்கை விடுத்து உள்ளோம். தண்டவாளம் அமைத்தபிறகு, தொழில்நுட்ப பணிகள் நடைபெறும். அதற்கு நேரம் தேவைப்படும். எனவே, இந்த வழித்தடத்தில் அனைத்து பணிகளையும் வேகப்படுத்த முயற்சி எடுத்து வருகிறோம்.
ரயில் நிலையங்கள் அமைக்கும் பணியையும் வேகப்படுத்தி உள்ளோம். பூந்தமல்லி - பவர்ஹவுஸ் வரை உயர்மட்டப்பாதை பணிகளை அடுத்த ஆண்டுநவம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.