புதுச்சேரி: மக்களவைத் தேர்தலில் வெல்ல புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற விநாயகர் கோயிலில் 508 தேங்காய் உடைத்து காங்கிரஸ் ஆதரவாளர்கள் இன்று வழிபாடு செய்தனர்.
இண்டியா கூட்டணியில் புதுச்சேரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தற்போதைய எம்.பி வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். வைத்திலிங்கம் இண்டியா கூட்டணி கட்சிகளின் அலுவலகங்களுக்கு சென்று ஆதரவு திரட்டி நிர்வாகிகள் கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளார்.
வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்கள், காங்கிரஸார் புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலுக்கு இன்று வந்தனர். மூட்டை, மூட்டையாக எடுத்து வரப்பட்ட தேங்காய்களை கொட்டினர். கோயில் வாயிலில் சிதறு தேங்காய் உடைக்கும் இடத்தில் தொடர்ந்து தேங்காய்களை உடைக்கத் தொடங்கினர்.
ஒருகட்டத்தில் கோயிலுக்கு வந்தோரும் கொட்டிக் கிடந்த தேங்காய்களை எடுத்து உடைத்தனர். மொத்தம் 508 தேங்காய்களை உடைத்து வழிபாடு செய்தனர். ''காங்கிரஸ் கூட்டணி வெல்ல பிராத்தனை செய்து சிதறு தேங்காய் உடைத்தோம்'' என்று கூறி புறப்பட்டனர்.