சென்னை: என்.எல்.சி நிறுவனத்தின் 7 விழுக்காடு பங்குகள் விற்பனை செய்ய எடுத்துள்ள முடிவு குறித்தான தனது அறிவிப்பை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடலூர் மாவட்டம், நெய்வேலியில் 1956-ஆம் ஆண்டு, என்.எல்.சி நிறுவனம் மிகச் சிறிய நிறுவனமாகத்தான் தொடங்கப்பட்டது. ஆனால், இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஆண்டுக்கு ரூ.11,000 கோடி வருவாய் ஈட்டும் என்.எல்.சி நிறுவனம், சராசரியாக ரூ.2,000 கோடி லாபம் ஈட்டுகிறது.
நியாயப்படி பார்த்தால், என்.எல்.சி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணமான நிலக்கரி நிறைந்த நிலங்களை வழங்கிய மக்களுக்கு, அதன் லாபத்தில் ஒரு பகுதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிய என்.எல்.சி., தமிழ்நாட்டிலிருந்து கிடைக்கும் லாபத்தை வட மாநிலங்களில் முதலீடு செய்கிறது. என்.எல்.சி நிறுவனத்தில், 10 ஆயிரம் நிரந்தர பணியாளர்களும், 15,000 ஒப்பந்த தொழிலாளர்களுமாக சுமார் 25,000 பேர் வரையிலும், நெய்வேலிக்கு வெளியேயும் பல ஆயிரக்கணக்கான நிரந்தர ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். மேலும், இது 50 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது.
இது ஒருபுறமிருக்க, தற்போது 7 விழுக்காடு பங்குகள், சலுகை விற்பனை என்ற அடிப்படையில் ரூ.226 மதிப்பிலான பங்கை, ரூ.212-க்கு விற்பனை செய்யும் அறிவிப்பை ஒன்றிய அரசு சமீபத்தில் அறிவித்திருக்கிறது. ஒன்றிய அரசின் அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதோடு, வன்மையாக கண்டிக்கதக்கது. நவரத்தின அந்தஸ்து பெற்று விளங்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, என்.எல்.சியை படிப்படியாக தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பது வெளிப்படையாக தெரிகிறது.
அதாவது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் ஒன்றிய அரசின் பணமாக்குதல் திட்டத்தின் கீழ், என்.எல்.சி நிறுவனம் 2025-ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்கப்பட விருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு கடந்தாண்டு அறிவித்திருந்தது. மேலும், தனியார்மயமாக்குவதற்கு முன்பாகவே 25,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி, அதையும் சேர்த்து தனியாருக்கு விற்க என்.எல்.சி திட்டமிட்டிருந்தது.
அந்த அறிவிப்புகளை சாத்தியப்படுத்த தான், தற்போது 7 விழுக்காடு பங்குகள், சலுகை விலையில் விற்பனை செய்யும் அறிவிப்பும். எனவே, இந்திய நாட்டின் மின் தேவையில் முக்கிய பங்கினை ஆற்றிடும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் 7 விழுக்காடு பங்குகள் விற்பனை அறிவிப்பு நடவடிக்கையை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.