சென்னை: தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், ‘வேலை காரணமாக வாக்குரிமையை யாரும் இழந்து விடக்கூடாது என்பதற்காக, தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில், வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆனால், இந்த விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர்கள் வாக்களித்தார்களா? என சரிபார்க்க எந்த நடைமுறையும் இல்லை.எனவே தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறையை பெற, வாக்களித்ததற்கான சான்றை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் தேதியில் வழங்கப்படும் விடுமுறையை பயன்படுத்தி தொழிலாளர்கள் வாக்களிக்காமல் இருப்பதால் விடுமுறையின் நோக்கம் நிறைவேற்றப்படாமல் போகிறது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நாளில் வாக்களிக்க விரும்பாமல் வேலை செய்ய விரும்பினால் சம்பந்தப்பட்ட தொழிலாளியை தனியார் நிறுவனம் வேலை செய்ய அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பினர். இதற்கு மனுதாரர் தரப்பில் பதிலளிக்கப்படவில்லை.
இதையடுத்து நீதிபதிகள், வாக்களிக்க வேலை தடையாக இருக்க கூடாது. தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டுமென்ற அடிப்படையில் தான் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வாக்களிக்க வேண்டும் என எப்படி ஒருவரை கட்டாயப்படுத்த முடியும்? தேர்தல் நாளில் ஊதியத்துடன் விடுமுறை பெற, வாக்களித்ததற்கான சான்று சமர்ப்பிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது என மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.