நாகர்கோவில்: கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக மீண்டும் பொன். ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தொடர்ந்து 10-வது முறையாக அவர் களம் காண்கிறார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு கணிசமான வாக்குகள் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் கிடைக்கப் பெறும். இத்தொகுதியில் 1991-ம் ஆண்டு முதல் பாஜக சார்பில் தொடர்ச்சியாக பொன். ராதா கிருஷ்ணன் போட்டியிடுகிறார். தொடர்ச்சியாக 9 முறை சந்தித்த மக்களவை தேர்தலில் 1999, 2014-ம் ஆண்டுகளில் இருமுறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சர் ஆனார். இதில் 7 முறை அவர் தோல்வியடைந்தார்.
தற்போது 72 வயதான நிலையில், இம்முறை வேறு புது முக வேட்பாளர் கன்னியாகுமரி தொகுதியில் களம் இறக்கப்படுவார் என்றும் பொன் ராதா கிருஷ்ணனை ஏதாவது ஒரு மாநிலத்தில் கவர்னராக்கும் முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் பரவின.
இவற்றை உடைத்தெறியும் வகையில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட மீண்டும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக தலைமை வாய்ப் பளித்து நேற்று அவரை வேட்பாளராக அறிவித்துள்ளது.
அதிமுக வேட்பாளராக பசிலியான் நசரேத் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார். காங்கிரஸ் சார்பில் இங்கு மீண்டும் விஜய் வசந்த் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொன். ராதாகிருஷ்ணன் மீண்டும் பாஜக சார்பில் களம் இறங்குவதால் கன்னியாகுமரி மக்களவை தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி யுள்ளது.. பொன் ராதாகிருஷ்ணனின் சொந்த ஊர் குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம். திருமணமாகாத இவர் இந்து நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்.
பொன். ராதாகிருஷ்ணன் கூறும் போது ‘‘கட்சி தலைமை என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காக்கும் வகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வெற்றிக்காக உழைப்பேன். குமரி மாவட்டத்தில் மேலும் பல வளர்ச்சி பணிகளை தொலைநோக்கு சிந்தனையுடன் கொண்டு வர முயற்சிப்பேன்’’ என்றார்.