அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸூக்கு பொன்னாடை போர்த்திய மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன்  எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சியினர். 
தமிழகம்

சிவகங்கை தொகுதியில் சேவியர்தாஸ் அதிமுக வேட்பாளர் ஆனது எப்படி?

இ.ஜெகநாதன்

சிவகங்கை: அதிமுக கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர்தாஸ், சிவகங்கை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய அதிமுக, தனது தலைமையில் வலுவான கூட்டணியை கட்டமைக்கப் போவதாக அறிவித்தது. ஆனால், எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. இதனால் ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவில் பலரும் சீட் கேட்க தயக்கம் காட்டி வந்தனர். சிவகங்கை மக்களவைத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் மகன் கருணாகரனை நிறுத்த கட்சித் தலைமை பேசிப் பார்த்தது. ஆனால், அவர் போட்டியிட விருப் பம் காட்டவில்லை.

அதேபோல் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களும் போட்டியிடத் தயாராக இல்லாததை அறிந்த கட்சித் தலைமை புதுமுகத்தை தேர்வு செய்ய முடிவு செய்தது.

இந்நிலையில் விருப்ப மனுக்கள் கொடுத்த 40 பேரில் ஒன்றியச் செயலாளர்கள் சேவியர்தாஸ், கோபி, மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் இளங்கோ, வழக்கறிஞர் கங்கா ஆகிய 4 பேரிடம் கட்சித் தலைமை நேர்காணல் நடத்தியது. சேவியர்தாஸுக்கு மாவட்டச் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் ஆதரவு இருந்ததால், அவரை கட்சித் தலைமை தேர்வு செய்தது.

அ.சேவியர் தாஸ் ( 49 ), எஸ்எஸ்எல்சி வரை படித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பனங்குடியைச் சேர்ந்த இவர் 1997-ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்து பனங்குடி கிளைச் செயலாளராகவும், நடராஜபுரம் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் இருந்தார். தற்போது கல்லல் ஒன்றியச் செயலாளராக உள்ளார். கல்குவாரி, கட்டிட ஒப்பந்ததாரராக உள்ளார். மனைவி மரியதிருஷ்டி ராதிகா, அருள் சஞ்சய், அருள் சந்தோஷ் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: ஒரு மக்களவைத் தொகுதிக்கு குறைந்தது ரூ.20 கோடி முதல் அதிகபட்சம் ரூ.40 கோடி வரை செலவாகும். இந்த முறை வேட்பாளர்களுக்கு பெரிய அளவில் உதவ கட்சித் தலைமை தயாராக இல்லை. இதனால் பலரும் போட்டியிட தயக்கம் காட்டினர்.

ஆனால் சேவியர்தாஸூக்கு மாவட்டச் செயலாளர் ஆசி இருந்ததால், கட்சித் தலைமை அவரை தேர்வு செய்தது. ஆரம்பக் கட்டத்தில் இருந்தே தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய அவர், அதற்கான ஆயத்த பணிகளையும் மேற் கொண்டு வந்தார் என்று கூறினர்.

SCROLL FOR NEXT