தமிழகத்தில் திமுக தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு பல்வேறு கட்சி, அமைப்புகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். யாதவ மக்கள் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் கு.ராஜாராம், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மற்றும் நிர்வாகிகள் நேற்று சந்தித்து, மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடனிருந்தார்.
தொடர்ந்து, அண்ணா அறிவாலயத்தில், முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, இண்டியா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உடனிருந்தார்.
மேலும், ஆதி தமிழர் கட்சி நிறுவனத் தலைவர் கு.ஜக்கையன், தேவேந்திரகுல மக்கள் முன்னேற்றப் பேரவையின் நிறுவனத் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன், அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகத் தலைவர் பொன்.முருகேசன், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் சங்கத் தலைவர் விருகை வி.என்.கண்ணன், திராவிடத் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பேரறிவாளன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப் ஆகியோரும் முதல்வரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.