சென்னை: சென்னையில் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய 10 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
தமிழகத்தில் சமீப காலமாக அமலாக்கத்துறையும், வருமான வரித் துறையும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், கட்டுமான நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அந்தவகையில் சென்னையில் நேற்று ஐடி நிறுவனம் உள்பட ரியல்எஸ்டேட் தொழில் மேற்கொண்டுவரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய இடங்கள் என 10 இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
ஏற்கெனவே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜி-ஸ்கொயர்நிறுவனம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன், இந்நிறுவனத்துடன் திமுகவின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இந்த குற்றச்சாட்டை ஜி-ஸ்கொயர் நிறுவனம் முழுமையாக மறுத்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரிச் சோதனை நடந்தது. குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும், வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாகவும் இந்த சோதனை நடந்ததாக கூறப்பட்டது.
இந்த சோதனையில் பல்வேறுமுக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக நேற்று காலை 7 மணி முதல் சென்னை ஆழ்வார்ப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள அந்நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 5-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். மேலும், நீலாங்கரை, அண்ணாநகர், சேத்துப்பட்டில் உள்ள அந்நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும், தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், நந்தனத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஏற்கெனவே, ஜி-ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தற்போது மீண்டும் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
ஆனாலும், சோதனை குறித்து வருமான வரித் துறை தரப்பில் இருந்து எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே முழுவிவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.