தமிழகத்தில் மின் கட்டணம் தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்திருந்த உத்தரவு, தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கட்டண மாற்றம் குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக மின் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் மின் சேவைகளுக்கான கட்டணம், சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2012-ல் உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு பழைய மின் கட்டணமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
விவசாயம் மற்றும் குடிசை களுக்கான இலவச மின்சாரத்துக் கான அரசின் மானியம் மட்டும் உயர்த்தப்பட்டது.
மின்சார மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, அனைத்து மாநில மின் நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 30-க்குள், நடப்பு ஆண்டு வரவு, செலவுக் கணக்கையும் தோராய எதிர்காலக் கணக்கையும் தாக்கல் செய்ய வேண்டும்.
அந்த மனுக்களை விசாரித்து, பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டபிறகு ஏப்ரலுக்கு முன்பு புதிய கட்டணம் தொடர்பான உத்தரவை ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பிக்கும்.
இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மின் கட்டணம் உயர்த்துவது குறித்து ஒழுங்குமுறை ஆணையத்தில் மின் வாரியம் மனு எதுவும் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் கட்டண நிர்ணயம் தொடர்பான ஒழுங்கு முறை விதிகள் 5, 6 (1)ன் படி, ஒவ்வொரு ஆண்டும் மின் நிறுவனங்கள் தோராய வருவாய்த் தேவை குறித்த அறிக்கையும், மின் கட்டண நிர்ணயம் தொடர்பான விண்ணப்பமும் நவம்பர் 30-க்கு முன்பு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
ஆனால், தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை கடந்த ஆண்டு குறிப்பிட்ட காலத்தில் 2 மனுக்களையும் தாக்கல் செய்யவில்லை.
அதேநேரம், மின் கட்டணம் தொடர்பாக 2013-ம் ஆண்டு ஜூன் 20-ம் தேதி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த மின் கட்டண உத்தரவு, மார்ச் 31-ம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே, கடந்த ஆண்டுக்கான கட்டண உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘ஒழுங்குமுறை ஆணையம் தற்காலிகமாக இந்த உத்தரவை தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்துள்ளது.
தேர்தலுக்குப் பின் புதிய மனுக்களை மின்வாரியம் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கட்டண உயர்வு இருக்குமா என்பதை சொல்ல முடியாது. ஆனால், ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, கட்டண நிர்ணயம் குறித்த மனு மற்றும் வரவு-செலவு அறிக்கையை மே மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தனர்.