புதுச்சேரி: மக்களவைத் தேர்தலையொட்டி சட்டப்பேரவை வாயிற்கதவுகள் மூடப்பட்டுள்ளன. மக்களுக்கு அனுமதி மறுப்பாலும், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆதரவாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாததாலும் வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரத்தில் தனது நண்பரின் வாட்ச் கடையில் முதல்வர் ரங்கசாமி ரிலாக்ஸாக பேசிவிட்டு பேரவைக்கு வந்தார்.
புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், புதுச்சேரி சட்டப்பேரவைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக சட்டப்பேரவையில் உள்ள அலுவலகங்களுக்கு முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வருவார்கள். அவர்களை சந்திக்க, நலத் திட்டங்களை பெற மக்கள், மக்கள் பிரதிநிதிகள் ஆதரவாளர்கள் வருவார்கள்.
தற்போது தேர்தலையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மட்டும் வந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வெளி நபர்கள், கட்சி நபர்களோ, தொகுதி மக்களோ வர அனுமதி கிடையாது.
இதையடுத்து, சட்டப்பேரவை நுழைவு வாயிலை, இழுத்து மூடி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறு சட்டப்பேரவை செயலாளர் தயாளன் உத்தரவிட்டு உள்ளார். இதன் பேரில் சட்டப்பேரவை காவலர்கள், நுழைவு வாயிலை மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சட்டபேரவை ஊழியர்கள் அடையாள அட்டை காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கபடுகிறார்கள். தேர்தல் முடியும் வரை இந்த நடைமுறை அமலில் இருப்பதாக, சட்டப்பேரவை அலுவலகம் அறிவித்து உள்ளது.
வாட்ச் கடையில் ரிலாக்ஸ்: புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக போட்டியிடுகிறது. இம்முடிவு அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையிலும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதம் நிலவிவருகிறது. பாஜகவினர் வேட்பாளர் அறிவிப்பில் மும்முரமாக இருக்கின்றனர். அதே நேரத்தில் கூட்டணித் தலைவரான ரங்கசாமி இன்று காலை பேரவைக்கு வரும் முன்பு நேரு வீதியிலுள்ள தனது நண்பரின் வாட்ச் கடையில் அமர்ந்து உரையாடி ரிலாக்ஸாக இருந்தார்.
சுமார் ஒரு மணி நேரம் தனது காரை நேரு வீதியில் நிறுத்திவிட்டு தனது நண்பரின் வாட்ச் கடையில் பேசிக் கொண்டிருந்தார். பாதுகாவலர்கள் தங்களின் வாகனங்களுடன் அங்கு நின்றிருந்தனர். பேரவைக்கு சென்றாலும் மக்களை சந்திக்க முடியாது என்பதால் நண்பருடன் உரையாடு கிறார் என்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பேரவைக்கு முதல்வர் புறப்பட்டு வந்தார்.