தமிழகம்

மத்திய அரசு ஒப்புதலுக்காக காத்திருக்கும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம்: ஆர்டிஐ மூலம் தகவல்

என்.சன்னாசி

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டம், மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்தது.

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக திருமங்கலம் - ஒத்தக்கடை வரை 32 கி.மீ. தூரத்துக்கு வழித்தடம் அமைக்கப்படுகிறது. திருமங்கலம் - வசந்த நகர் வரை உயர் நிலை பாலமும், வசந்தநகர் - தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை 10 மீ. ஆழத்தில் பூமிக்கடியிலும், தல்லாகுளம் - ஒத்தக்கடை உயர்நிலை பாலம் கொண்ட வழித்தடம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தில் 32 கி.மீ. தூரத்தில் 5 கி.மீ. சுரங்கப் பாதையிலும், எஞ்சிய 27 கி.மீ. தூரம் மேல்நிலை வழித்தடமாகவும் அமைக்கப்படும். 27 ரயில் நிலையங்களில் 3 சுரங்கப் பாதையில் அமைகிறது.

மதுரை ரயில் நிலையம், பெரியார் பேருந்து நிலையத்தை ஒருங்கிணைத்து ஒன்றும், மீனாட்சி அம்மன் கோயில், கோரிப்பாளையம் என 3 சுரங்கப் பாதை ரயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. பணி தொடங்கிய முதல் மேல் மட்ட வழித்தடம் 3 ஆண்டுகளிலும், சுரங்கப்பாதை அமைக்க நான்கரை ஆண்டும் தேவைப்படும். மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை பொறுத்த வரை போக்கு வரத்துக்கு பாதிப்பின்றி பார்த்துக் கொள்வோம். வழித்தடம் எந்த வழியில் வருகிறது என்பதை தெளிவாக ஆய்வு செய்துள்ளோம் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான மண் பரிசோதனை, வழித்தடம், ரயில் நிலையம் அமையும் பகுதி என 90 சதவீத ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் குழுவினர் முடித்த நிலையில், ஜூலை 15-ல் அரசுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த தயானந்த கிருஷ்ணன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகத்தில் தகவல் கோரி இருந்தார்.

இதற்கு அமைச்சகம் அளித்த பதிலில், ‘ மதுரை மெட்ரோ ரயில் திட்ட மதிப்பீடு ரூ 11,368.35 கோடி, கோவை மெட்ரோ ரயில் திட்ட மதிப்பீடு ரூ. 10,740.49 கோடி திட்டங்களுக்கான தமிழக அரசு சமர்பித்த விரிவான திட்ட அறிக்கை பிப்ரவரி 19-ம் தேதி கிடைத்தது எனத் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இத்திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக் காக காத்திருப்பது தெரிகிறது.

இது குறித்து மதுரை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரியிடம் கேட்டபோது, தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் உள்ளது. புதிதாக அமையவிருக்கும் மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் உடனே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டு பணிகளை தொடங்கி விடுவோம் என்றார்.

SCROLL FOR NEXT