கோவை: கோவை மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். கணபதி நல்ல தண்ணீர் தோட்டம் பகுதியில் வசித்து வரும் அவர், கோவை மாநகர் மாவட்ட திமுக அவைத் தலைவராக உள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு அதிமுக கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சி வடக்கு மண்டல தலைவராக பணியாற்றி வந்தார். பின்னர், 2014-ம் ஆண்டு நடந்த கோவை மாநகராட்சி மேயர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றினார். அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கட்சிப் பணிகளில் இருந்து ஒதுக்கியிருந்த அவர், 2020-ல் திமுகவில் இணைந்தார்.
கணபதி ராஜ் குமார் பிஏ ஆங்கில இலக்கியம் முடித்துவிட்டு, எம்.ஏ மாஸ் கம்யூனிகேஷன் படித்துள்ளார். தொடர்ந்து எல்எல்பி மற்றும் ஜெர்னலிசம் அன்ட் மாஸ் கம்யூனிகேஷனில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு மனைவி தமயந்தி, விகாஷ் என்ற மகன், யாழினி என்ற மகள் உள்ளனர்.