தமிழகம்

கூட்டுறவு வங்கி பணி நியமனத்துக்கு காத்திருக்கும் 7,200 பேர்

எஸ்.நீலவண்ணன்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்க பணிகளுக்கு தேர்வுபெற்றும் 2 ஆண்டுகளாக பணி நியமன ஆணைக்காக 7, 200 பேர் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக, உங்கள் குரல் பகுதிக்கு வந்த புகாரின் அடிப்படையில் ‘தி இந்து’ விவரங்கள் சேகரித்தது.

கூட்டுறவு தேர்வாணையத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 3589 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 9-12-2012 அன்று தேர்வு நடந்தது. 2.23 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு 28-12-2012 அன்று சென்னையில் நேர்முக தேர்வு , சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. பின்னர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு இணை பதிவாளர் அலுவலகத்தில் 2013 ஜனவரி மாதம் நேர்முகதேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இதற்கிடையே, தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் தேர்வை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தேர்வான 7,200 பேர் சார்பாக உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ் கே. அக்னிஹோத்ரி, நீதிபதி எம் எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. விசாரணைக்கு பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுக்கான விடைகளை கூட்டுறவுத் துறை பணியாளர்கள் தேர்வாணையம் வெளியிட வேண்டும்.

மேலும் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தேர்வர்களின் கட் ஆஃப் மதிப்பெண்களுடன் சேர்த்து வெளியிடவேண்டும். எதிர்காலத்தில் காலி பணியிடங்களை நிரப்பும்போது தகுந்த முறைப்படி தேர்வு நடத்தப்படவேண்டும்’ என தெரிவித்தனர்.

ஆனால், தீர்ப்பு வெளியான பிறகும் இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை. இது குறித்து பணிக்காக காத்திருக்கும் இசக்கி முத்து, நிவாஸ் குமார், சிவா, ராகவன் ராஜ், அருண் மணிகண்டன், செபாஸ்டியன் ஆகியோர் கூறும்போது, “உயர்நீதிமன்றத்தில் ஜூலை 15-ம் தேதி தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வெளியாகி ஒரு மாதம் ஆன போதும் தேர்வின் இறுதி முடிவு சம்பந்தப்பட்ட மதிப்பெண், கட் ஆஃப் மதிப்பெண் மற்றும் இறுதிப் பட்டியலை கூட்டுறவு பணியாளர் தேர்வாணையம் வெளியிடவில்லை. இது தொடர்பாக பலமுறை கூட்டுறவுத்துறை பதிவாளரை சந்தித்து மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

கடந்த ஜூலை 18ம் தேதி அன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவுத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் செல்லூர்ராஜு, ‘கூட்டுறவுத் துறையில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்படும்’ என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT