காஞ்சிபுரம்: பரந்தூர் பசுமை வெளி விமானநிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு சிறுவள்ளூர் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் நிலம் கையகப்படுத்தும் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆட்சேப மனுக்களை வழங்கினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது.
விமான நிலையம் அமைப்பதற்கு நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி உள்ளது. மேல் பொடவூர், சிறுவள்ளூர், பரந்தூர், உள்ளிட்ட கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு, நிலங்களை கையகப்படுத்தும் பணிக்கு வருவாய்த் துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிறுவள்ளூர் கிராமத்தில் 249 பேர் பாதிக்கப்படக்கூடிய வகையில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், வீட்டு மனைகள் அடங்கி உள்ள 42 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிட்டு ஆட்சேபம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என நாளிதழில் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுவள்ளூர் கிராமத்தில் பாதிக்கப்படக்கூடிய கிராம மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளை கேட் பகுதியில் அமைந்துள்ள விமான நிலையத்துக்கான நிலம் எடுப்பு திட்ட அலுவலகத்துக்கு நேரில் வந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சிறுவள்ளூர் கிராமத்தில் தங்கள் நிலங்களை கையகப் படுத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி தங்கள் நிலங்களை எடுக்கக் கூடாது என ஆட்சேபம் தெரிவித்து மனுக்களை அளித்தனர்.