தமிழகம்

தேர்தல் நடத்தை விதிகள் அமல் - கோயில் விழாக்களுக்கு அனுமதி பெறுவது எப்படி?

செய்திப்பிரிவு

மதுரை: மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

மதுரை மாவட்டத்தில் நகரம் முதல் கிராமங்கள் வரை கோயில்களில் பங்குனித் திருவிழா மற்றும் வீடுகளில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பக்தர்களும், பொதுமக்களும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில், பங்குனி திருவிழாவுக்கான அனுமதியைப் பெற காவல் நிலையங்கள் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் தினமும் குவிகின்றனர்.

கடந்த 2 நாட்களாகவே உசிலம்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், திருமங்கலம் கள்ளிக்குடி மேலூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திருவிழா ஏற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அமைக்கப் பட்டுள்ள ஒற்றைச் சாளர முறை அனுமதி பெறும் அலுவலகத்துக்கு வந்து திரும்பிச் செல்லும் நிலை உள்ளது. ஆன்லைன் மூலம் முயற்சித்தாலும், திருவிழா நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பாக மட்டுமே அனுமதி பெறும் நிபந்தனையால் மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

தனியார் மண்டபங்களில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்திடம் அனுமதிபெற வேண்டும் என்ற விதிமுறையால் ஆட்சியர் அலு வலகத்துக்கு அதிகமானோர் வரும் நிலை உருவாகியுள்ளது. கோயில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி பெறுவது தொடர்பாக மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களாக ஆட்சியர் அலுவலகத்தில் கோயில் திருவிழா, சுப நிகழ்ச்சிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல் அந்தந்தப் பகுதிகளிலுள்ள உதவி தேர்தல் அலுவலக மையங்கள் மூலமாக விண்ணப்பித்து அனுமதியைப் பெறலாம். உதவித் தேர்தல் அலுவலகத்தில் திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்வுக்கான அனுமதி அளிக்க உதவி மையங்கள் ஏற்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை பற்றி மக்களுக்கு உரிய விளக்கமும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்,’ என்றனர்.

SCROLL FOR NEXT