மதுரை: மதுரையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் காளிதாஸ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி.பட்டினம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தேன். கடந்த 2014 அக். 14-ம் தேதி அருள்தாஸ் என்பவர் அளித்த புகாரின்பேரில், சையது முகமது என்பவர் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வரப்பட்டார்.
தற்காத்துக் கொள்ளவே... அப்போது சையது முகமது மதுபோதையில் இருந்தார். என் அறையின் மேஜையில் இருந்த கத்தியைஎடுத்து, என்னைத் தாக்க முற்பட்டார். இதனால் என்னை தற்காத்துக்கொள்ள துப்பாக்கியால் சுட்டேன்.
இதில் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். இந்த வழக்கை ராமநாதபுரம் நீதிமன்றம் விசாரித்து, எனக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதித்து 2019-ல் தீர்ப்பளித்தது.
நான் முன்விரோதம் காரணமாக, சையது முகமதுவை சுடவில்லை. என்னை தற்காத்துக் கொள்ளவே துப்பாக்கியால் சுட்டேன். எனவே, ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், குமரப்பன் அமர்வுவிசாரித்தது. பின்னர் நீதிபதிகள்,“விசாரணைக்கு அழைக்கப்பட்டவர் கத்தியால் மனுதாரரைத் தாக்க முயன்றுள்ளார். அப்போதுமனுதாரர் தன்னை தற்காத்துக்கொள்ளும் நோக்கில்தான் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த வழக்கில் போலீஸார் சில ஆவணங்களை உரிய நேரத்தில் தாக்கல் செய்யவில்லை. எனவே,மனுதாரருக்கு ராமநாதபுரம் நீதிமன்றம் 2019-ல் வழங்கிய ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.