வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை மாவட்டத் தலைவரும், திமுக பிரமுகருமான அசோகனின் அச்சகத்தில் நேற்று இரவு சோதனை மேற்கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள். படம்: வி.எம்.மணிநாதன் 
தமிழகம்

துரைமுருகனுக்கு நெருக்கமான வேலூர் திமுக பிரமுகரின் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை

செய்திப்பிரிவு

வேலூர்: வேலூரில் அமைச்சர் துரைமுருகனின் நெருங்கிய தொடர்பில் உள்ள முக்கிய திமுக பிரமுகரான அசோகன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இரவு 10 மணி வரை வருமான வரி சோதனை தொடர்ந்தது.

திமுக பொருளாளர்: வேலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை தலைவராகப் பொறுப்பு வகிப்பவர் அசோகன். இவர் வேலூர் மாநகர திமுக பொருளாளராகவும் பொறுப்பு வகிக்கிறார். மேலும், வேலூர் தோட்டப்பாளையம் கள்ளுக்கடை பகுதியில் அச்சகம் (பிரின்டிங் பிரஸ்) நடத்தி வருகிறார்.

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின் நெருங்கிய தொடர்பில் இருப்பவர் என்றும் கூறப்படுகிறது.

வரும் மக்களவைத் தேர்தலில், வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் மீண்டும் போட்டியிட உள்ள நிலையில், அவருக்கு நெருங்கிய தொடர்பில் உள்ள அசோகனின் அச்சக அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு 8 மணியளவில் சோதனை மேற்கொண்டனர்.

இரவு 10 மணி வரை... இரவு 10 மணி வரை வருமான வரித் துறை சோதனை தொடர்ந்தது. இந்த சோதனையில் சொத்து உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் ஏதும் கைப்பற்றப்பட்டதா என்பது குறித்து, சோதனை நிறைவடைந்த பின்னரே தெரிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறினர்.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், வேலூர் தொகுதியில் அமைச்சருக்கு நெருக்கமான முக்கியப் பிரமுகரின் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT