சென்னை: கோடை விடுமுறையையொட்டி, முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்குவதற்கான கால அட்டவணை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறையையொட்டி, வரும் ஏப்ரல், மே மாதங்களில் பொதுமக்கள் அதிகளவில் வெளியூர், சுற்றுலா பயணம் செல்வர். பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல, சிறப்பு ரயில்கள் இயக்குவது, விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்குவது போன்ற நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: வரும் கோடை விடுமுறையை ஒட்டி, சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா இடங்களுக்கும் பயணிகள் அதிகளவில் சென்று வருவார்கள்.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப, தாம்பரம் – திருநெல்வேலி மற்றும் செங்கோட்டை, சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில், கன்னியாகுமரி, வேளாங்கண்ணி, சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர், திருவனந்தபுரம் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
கூடுதல் பெட்டிகள்: இதற்கான, காலஅட்டவணை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிறப்பு ரயில்கள் மட்டுமின்றி, வழக்கமான ரயில்களில் காத்திருப்போர் பட்டியலை குறைக்கும் விதமாக, கூடுதல் பெட்டிகளும் இணைத்து இயக்கப்படும். தற்போது, 30 சிறப்பு ரயில்களின் 150 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.