திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில் அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரபுசங்கர் நேற்று ஆய்வு செய்தார். திருத்தணி கோட்டாட்சியர் தீபா, வட்டாட்சியர் மதியழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
தமிழகம்

காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சோதனை: ரூ.9.81 கோடி மதிப்பு நகை, பொருட்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்/ஸ்ரீபெரும்புதூர்: காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினார். அப்போது ரூ.9.81 கோடி மதிப்புள்ள நகை,துணிகள், சமையல் பாத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தப்படுகின்றன. காஞ்சிபுரம் அருகே உள்ள வையாவூர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான தங்க நகைகளுடன் வந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

ஆனால் அந்தவாகனம் ஒரு நகைக் கடைக்கு வந்ததாக தெரிகிறது. இருப்பினும் உரிய ஆவணங்களை கொண்டு வந்து காட்டிவிட்டு நகைகளை பெற்றுச் செல்லும்படி கூறியுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.6.67 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் உத்திரமேரூர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் நகை, துணிகள் உட்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2.83 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.9.5 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.7 லட்சம் பாத்திரங்கள்: அதேபோல நேற்று முன்தினம் இரவு ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள தண்டலம் சுங்கச்சாவடியில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆவடி அருகே பருத்திப்பட்டு பகுதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற சரக்கு லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், உரிய ஆவணங்கள் இன்றி நான்ஸ்டிக் தவா உள்ளிட்ட சமையல் பாத்திரங்கள் அடங்கிய 145 எண்ணிக்கையிலான அட்டைப்பெட்டிகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இவற்றைப் பறிமுதல் செய்து சீல் வைத்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.7 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதேபோல அம்பத்தூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டகொரட்டூர் வாட்டர் கேனால் சாலைவழியாக வந்த காரை நிறுத்தி சோதனை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அந்த காரில் வந்த வட மாநில நபர்களிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.24.32 லட்சம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பறக்கும்படையினர் பணத்தை பறிமுதல் செய்து அம்பத்தூர் தொகுதி உதவிதேர்தல் அலுவலர் கருணாகரனிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்படும் பலபொருட்கள் வியாபார நிறுவனங்களுக்கு செல்லும் பொருட்களாக உள்ளன. தேர்தலுக்கு விநியோகிக்கப்படுபவை இல்லை. உரிய ஆவணங்கள் இருந்தால் அவை உடனடியாக விடுவிக்கப்படும்.

ஆனால்வரியை குறைப்பதற்காக உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றால் அவற்றை திரும்பப் பெறுவதில்் சிக்கல் ஏற்படும். அவை தேர்தல் நோக்கத்துக்காக கொண்டு செல்வதாக கருத்தப்படும். இதனால் வியாபாரிகள் பலர் பெரும் சிக்கலில் உள்ளனர்.

SCROLL FOR NEXT