சென்னை: திருப்போரூர் அருகே துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதா? என்பது குறித்து பதில் அளிக்க போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் இளலூர் அருகே கடந்தாண்டு பிப்.15 அன்று சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த 3 பேர் மற்றும் அவர்களது கார்களை போலீஸார் சோதனையிட்டனர். அப்போது கார்களில் இருந்த 3 துப்பாக்கிகள், 163 தோட்டாக்கள், 57 வெளிநாட்டு மதுபாட்டில்கள், 250 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதையடுத்து போலீஸார் அவர்கள் மூவரையும் கைது செய்தனர்.
முறையாக விசாரிக்கவில்லை: இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வாராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘‘இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளுக்கு உரிமம் கிடையாது. மேலும் இந்த சம்பவத்தில் சிக்கிய 3 விலை உயர்ந்த கார்களையும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் முக்கிய நபரையும் இந்த வழக்கில் சேர்க்காமல் போலீஸார் தப்ப விட்டுள்ளனர். இந்த வழக்கை போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என்பதால் விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது துப்பாக்கி பறிமுதல் தொடர்பான இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், இந்தவழக்கின் புலன் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்றாலோ அல்லது விசாரணையே நடைபெற வில்லை என்றாலோதான் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றும்படி கோர முடியும் என கருத்து தெரிவித்த நீதிபதிகள், துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக சிபிஐ-க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பதுகுறித்து போலீஸார் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசார ணையை மார்ச் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.