சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸில் கார்த்தி சிதம்பரத்துக்கு போட்டியாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி ஆகியோர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
சிவகங்கை மக்களவைத் தொகுதியை காங்கிரஸுக்கு திமுக ஒதுக்கி உள்ளது. இத்தொகுதியில் தற்போது எம்பியாக உள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு சீட் கொடுக்க கூடாது என முன்னாள் மத்திய இணை அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏக்கள் கே.ஆர்.ராமசாமி, சுந்தரம் ஆகியோர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். ஆனால் அதை கண்டுகொள்ளாமல் கார்த்தி சிதம்பரமும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை விருப்ப மனுக்களை பெற்று வருகிறது. இன்று ( மார்ச் 20 ) கார்த்தி சிதம்பரம் விருப்ப மனு கொடுக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே நேற்று இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமி, முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் சிவகங்கை தொகுதிக்கு போட்டியிட விருப்ப மனுக்களை கொடுத்தனர்.