தமிழகம்

மதுரை அருகே பணம், பரிசு பொருட்கள், பட்டாசுகள் பறிமுதல்: பறக்கும் படை நடவடிக்கை

என்.சன்னாசி

மதுரை: மதுரை மாவட்டத்தில் மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட எல்லையில் 70 பறக்கும் படையினர் சுழற்சி முறையில் வாகனச் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், மதுரை அருகே சக்குடி பகுதியில் நேற்று இரவில் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக சென்ற கார் ஒன்றை வழிமறித்து சோதனை செய்தனர். காரில் இருந்த காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த உடையப்பன் என்பவர் கொண்டு சென்ற ரூ.1. 32 லட்சம் பணத்துக்கு உரிய ஆவணமின்றி, பறக்கும் படை அதிகாரிகள் பறி முதல் செய்து, கோட்டாட்சியர் ஷாலினியிடம் ஒப்படைத்தனர்.

இது போன்று மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கடவூர் பகுதியில் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் கண்டெய்னர் லாரி ஒன்றில் சில ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பரிசு பொருட்கள், சட்டைகள், பட்டாசுகள் பெட்டி, பெட்டியாக ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்டது தெரிந்தது. கண்டெய்ணர் லாரியை மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு ஓட்டிச் சென்று ஒப்படைத்தனர்.

இதனிடையே, மதுரை பாண்டிக்கோவில் அருகே இன்று தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கை செய்னர். அப்போது, சிவகாசியில் இருந்து ஆந்திரா சென்ற ஆம்னி பேருந்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 11 பட்டாசு பெட்டிகளை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பணம் மற்றும் பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் அதிகாரிகள், காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT