அமைச்சர் ஐ.பெரியசாமி 
தமிழகம்

ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த 2006-11 திமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி வாரியத் துறை அமைச்சராக பதவி வகித்த தற்போதைய அமைச்சர் ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலரான கணேசன் என்பவருக்கு முறைகேடாக வீடு ஒதுக்கீடு செய்ததாக ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சென்னை எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து, வழக்கில் இருந்து ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது அமைச்சர் ஐ.பெரியசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில்சிபில் வாதிட்டதாவது:

ஆளுநரின் முன்அனுமதி பெறாமல் இந்த வழக்கை போலீஸார் தொடர்ந்துள்ளனர். அதிகாரமற்ற ஒருவர் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்குப் பதியப்பட்டுள்ளது சட்ட விரோதமானது. இந்த வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எந்த தவறும் இல்லை.

தற்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கின் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதால், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு வாதிட்டார். ஆனால் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், மார்ச் 28-ல் சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கவுள்ள வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய ஐ.பெரியசாமிக்கு அனுமதி வழங்கியும் உத்தரவிட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT