சென்னை: சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. சென்னை மாவட்டத்தில் 39 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 944 அமைவிடங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 719 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன.
இதில் பதற்றமானதாக 579 வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் சார்பில் பொது இடங்கள் மற்றும்தனியார் இடங்களில் அமைக்கப்பட்ட விளம்பரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில், வரும் 20-ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதனால் வேட்புமனு தாக்கலை சிரமம் இன்றி மேற்கொள்வது, அதற்கு தேவையான ஆவணங்களை கொண்டு வருதல் உள்ளிட்ட நடைமுறைகள், தேர்தல் நடத்தை விதிகளுக்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு வழங்குவது, தேர்தல்விளம்பரங்கள் செய்வதில் உள்ள கட்டுப்பாடுகள், தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி பெறுவது உள்ளிட்டவை தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்க சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்கும் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதற்காக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் மாவட்ட தேர்தல் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.