தமிழகம்

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் கைதான பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், தரங்கம்பாடி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தருமபுரம் ஆதீனம் 27-வதுகுருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தொடர்பான வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி, பணம் கேட்டு சிலர் மிரட்டுவதாக ஆதீனகர்த்தரின் சகோதரரும், அவரது உதவியாளருமான விருத்தகிரி, மயிலாடுதுறை எஸ்.பி.யிடம் கடந்த பிப்.25-ம் தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில், மயிலாடுதுறை போலீஸார் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்து, திருவெண்காடு சம்பாகட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை பிப் .28-ம் தேதி கைது செய்தனர். பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் க.அகோரம் உள்ளிட்ட 5 பேரை தேடி வந்தனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டம், அலிபாக்கில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த அகோரத்தை தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம்கைது செய்தனர். அவரை மயிலாடுதுறைக்கு நேற்று அழைத்து வந்து, செம்பனார்கோவில் திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை மார்ச் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி கனிமொழி உத்தரவிட்டார். இதையடுத்து அவர் மயிலாடுதுறை சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, அகோரத்தை பார்ப்பதற்காக நீதிமன்றம் பகுதியில் திரண்ட கட்சி நிர்வாகிகள்,ஆதரவாளர்கள் 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT