தமிழகம்

பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கவுன்சலிங் இன்று நிறைவு: ஒரு லட்சத்துக்கும் மேல் காலியிடங்கள்

செய்திப்பிரிவு

பொறியியல் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, பிளஸ்-2வில் தேர்வு பெறத் தவறி பின்னர் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான துணைகவுன்சிலிங் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.

பொறியியல் படிப்புக்கான பொது கவுன்சலிங் ஜூலை 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சலிங் இன்று (திங்கள்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக நடத்தப்படும் துணை கவுன்சிலிங் ஆகஸ்ட் 6-ம் தேதி (புதன்கிழமை) அன்று நடத்தப்படும் என்றும் இதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம் என்றும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.

இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து பதிவுசெய்ய வேண்டும். வரும்போது, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-2 ஹால்டிக்கெட், டிசி., நிரந்தர சாதி சான்று, முதல் பட்டதாரி மாணவர் எனில் அதற்கான சான்று மற்றும் உறுதியளிப்பு படிவம், போட்டோ, விண்ணப்பக் கட்டணம் ரூ.500 (எஸ்சி, எஸ்டி மாணவர்கள் என்றால் ரூ.250 மட்டும்) ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இது

தொடர்பான கூடுதல் விவரங்களை www.annauniv.edu/tnea2014 என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், பொறியியல் படிப்பில் எஸ்சி (அருந்ததியர்) உள் ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள இடங்கள் எஸ்சி மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும். இதற்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும்.

இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அன்றைய தினம் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தங்கள் வருகையை பதிவுசெய்த பிறகு கவுன்சலிங்கில் கலந்துகொள்ளலாம்.

ஏற்கெனவே ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்களும் விரும்பினால் தங்கள் அசல் ஒதுக்கீட்டு ஆணையுடன் பதிவு செய்து கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ஒரு லட்சத்துக்கும் மேல் காலியிடங்கள்

மொத்தமுள்ள 2 லட்சத்து 4 ஆயிரம் பிஇ., பிடெக். இடங்களுக்கு ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 615 பேருக்கு கவுன்சலிங்குக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. பொது கவுன்சலிங் தொடங்கிய முதல் நாளிலேயே 730 பேர் வரவில்லை. அதிகபட்சமாக கடந்த 2-ம் தேதி 4,227 பேர் கவுன்சலிங்குக்கு வராமல் ஆப்சென்ட் ஆகிவிட்டனர். பொது கவுன்சலிங் மூலமாக இதுவரை ஏறத்தாழ ஒரு லட்சம் மாணவ, மாணவிகள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கவுன்சலிங்குக்கு வரவில்லை. கவுன்சலிங் இன்று முடிவடையும் நிலையில், ஆப்சென்ட் எண்ணிக்கை அதிகரிப்பால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் பொறியியல் கல்லூரிகளில் காலியாக கிடக்கின்றன. கடந்த ஆண்டு 90 ஆயிரம் இடங்கள் நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT