சென்னை: போலி ஆவணங்கள் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கி அதன் மூலம் வங்கியில் ரூ.1,350 கோடிகடன் பெற முயற்சி நடப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில், இந்த மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை ஐஜி-3 இன்போ என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கி கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கொடுங்கையூரைச் சேர்ந்த கலாமின் அக்னிச்சிறகுகள் அறக்கட்டளையின் செயலாளர் செந்தில்குமார், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
கடும் நடவடிக்கை: இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா மற்றும் நீதிபதி டி.பரத சக்ர வர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் ஆஜராகி, ‘‘சட்ட விரோதமாக ஒதுக்கப்பட்ட இந்த நிலத்தை அந்நிறுவனம் ஆக்சிஸ் வங்கியில் அடமானம் வைத்து ரூ.1,350 கோடி கடன் பெற முயற்சித்து வருவதால் அந்நிறுவனத்துக்கு பத்திரப் பதிவு செய்யக் கூடாது என தடை விதிக்க வேண்டும்.மேலும் சதுப்பு நிலத்தை தனியாருக்கு தாரைவார்த்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
அரசு சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமார் ஆஜராகி, ‘‘போலி ஆவணங்களை உருவாக்கி பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கிய விவகாரத்தில் தொடர்புடைய பத்திரப்பதிவுத் துறை, வருவாய்த் துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் யார், யாருக்கு இந்த மோசடியில் தொடர்புள்ளது என்பதைக் கண்டறிய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு பள்ளிக்கரணை சதுப்பு நிலம் சட்ட விரோதமாக யாருக்கேனும் ஒதுக்கப்பட்டுள்ளதா? சதுப்பு நிலங்களுக்கு தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறியும் என்பதால், மனுதாரர் அந்தக் குழுவை அணுகி முறையிடலாம்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘மனுதாரர், அரசு இதற்காக நியமித்துள்ள குழுவை அணுகி முறையிடலாம். அந்தக் குழு மனுதாரரின் புகாரை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கலாம்’’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.