தமிழகம்

மண் சரிவில் சிக்கியவரை மீட்கும்போது தலை துண்டானது | தாம்பரம் பாதாள சாக்கடை பணி

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 5-வது மண்டலம் ஆதிநகர் காமராஜர் தெருவில் நடைபெற்று வரும் பாதாளச் சாக்கடை பணியில் தினமும் 2 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போலப் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன.அப்போது மண் சரிந்து 2 ஊழியர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இதில் தென்காசி மாவட்டத்தை சண்முக சுந்தரம் ( 49 ) என்பவர் தப்பித்து மேலே ஏறினார். மற்றொருவரான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முருகானந்தம் ( 27 ) மட்டும் மண்ணுக்குள் சிக்கி கொண்டார். உடனடியாக சிக்கி இருந்தவரை மீட்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

அதன் ஒரு பகுதியாகக் கொண்டு அவரை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால் மீட்பு பணியின் போது எதிர்பாராத விதமாக பொக்லைன் இயந்திரம் பட்டு அவரது தலை துண்டானது. அவரது தலை மட்டும் தனியாக முதலில் எடுக்கப்பட்டது. இதையடுத்து இப்போது உடலை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அவர் உயிரோடு இருந்த போது தலை துண்டாகி எடுக்கப்பட்டதா அல்லது உயிரிழந்த பின்னர், இந்தச் சம்பவம் நடந்ததாக என்பது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் குறித்து சேலையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2021-ம்ஆண்டு தாம்பரத்தில் பாதாள சாக்கடை பணியின் போது ஒருவர் உயிரிழந்தார்.

இது குறித்து மக்கள் கூறியது: பாதாளச் சாக்கடை அமைக்கும் பணிக்காக இப்பகுதி மண் தன்மை குறித்து அதிகாரிகள் முன் கூட்டியே ஆய்வு செய்து போதிய தடுப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். பள்ளம் தோண்டும் போது மாநகராட்சி அதிகாரிகள் இல்லை. இதுபோன்று மண் சரிவு ஏற்பட்டால் மக்கள் அப்பகுதிக்குள் சென்று விடாமல் தடுக்க உரிய தடுப்புகள் ஏற்படுத்தவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தொடர்ந்து வலியுறுத்தினோம். அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இனிமேலாவது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT