தமிழகம்

சென்னை மெட்ரோ ரயில்களில் டிஜிட்டல் வரைபடக் காட்சி - அடுத்த ஆண்டு அமல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் பல்வேறு தகவல்களுடன் கூடிய டிஜிட்டல் பாதை வரைபடக் காட்சி முறையை ( டைனமிக் ரூட் மேப் டிஸ்பிளே சிஸ்டம் ) அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப் படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினசரி 2.60 லட்சம் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். பயணிகள் வசதிக்காக, ரயில்களில் பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரயில்களில் பல்வேறு தகவல்களுடன் கூடிய டிஜிட்டல் பாதை வரைபடக் காட்சி முறை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ரயிலில் நிறுவப்படவுள்ள புதிய டிஜிட்டல் காட்சி முறையில், தற்போதைய இடம், அடுத்த நிலையம், நிலையங்களுக்கு இடையிலான தூரம் மற்றும் அருகிலுள்ள அடையாளங்களைக் கூட காண்பிக்கும். புதிய டிஜிட்டல் காட்சி முறை அமைப்பது தொடர்பாக ஏற்கெனவே ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுவிட்டது. இன்னும் சிலமாதங்களில் ஒப்பந்தம் வழங்கப்படும்.

மெட்ரோ ரயிலின் ஒவ்வொரு பெட்டியிலும் 4 டைனமிக் வரை படங்கள் மற்றும் 4 நிலையான வரைபடங்கள் உள்ளன. நிலையான வரை படங்கள் ஒரு பக்கத்தில் தொடர்ந்து இருக்கும்போது, டைனமிக் வரைபடங்கள் மாற்றப்பட்டு, டிஜிட்டல் பாதை காட்சி முறை ஏற்படுத்தப்படும். இதில்,எந்தப் பக்கத்தில் கதவு திறக்கப்படும் என்பதை அறிய முடியும். ரயிலின் உள்ளேயும் வெளியேயும் வெப்பநிலை மற்றும் ரயில் இயங்கும் வேகம் போன்ற கூடுதல் தகவல்களும் வழங்கப்படலாம்.

அவசர காலத்தில், அவசர தொடர்பு எண்கள் மற்றும் வெளியேறும் வழிமுறைகளையும் காண்பிக்கும். இதன் முன்மாதிரி இந்த ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில், ரயில்களில் படிப்படியாக டிஜிட்டல் பாதை வரைபட காட்சி முறைகள் செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT