பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் - முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தநிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் ஆர்.பி.எஃப் போலீஸார் கண்காணிப்பை அதிகரிக்கத் தொடங்கியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளில் முதல் கட்டமாக ஏப்.19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவித்தவுடன், நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன. தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள தொகைக்கு அதிகமாக ரொக்கமாக எடுத்துச் செல்லக் கூடாது. அப்படி எடுத்து செல்லும் போது, முறையான ஆவணங்கள் வைத்திருப்பது அவசியமாகிறது.

முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குவந்துள்ளதால், முக்கிய இடங்களில் வாகன சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல், எழும்பூர் உட்பட முக்கிய ரயில் நிலையங்களில் ஆர்.பி.எஃப் போலீஸார் கண்காணிப்பை அதிகரிக்கத் தொடங்கி உள்ளனர்.

வட மாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு வந்தடையும் ரயில்களில் வரும் பயணிகளை கண்காணித்தல், சோதனை ஆகிய பணிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். இது குறித்து, சென்னை கோட்ட ஆர்பிஎஃப் அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதை தொடர்ந்து, ரயில்களில் இருந்து இறங்கி வரும் பயணிகளை கண்காணிக்கத் தொடங்கி உள்ளோம்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல்..: சந்தேகப்படும்படியான நபர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவோம். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை ரொக்கமாக எடுத்துச் சென்றால், உரிய ஆவணம் வைத்திருக்க வேண்டும். தங்கம் எடுத்துச் சென்றாலும் உரிய ஆவணம் வைத்திருப்பது அவசியம். உரிய ஆவணம் இன்றி லட்சக் கணக்கில் பணத்தை ரொக்கமாக எடுத்து வந்தால், பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப் படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT