சென்னை: சிசிடிவி கேமராக்களின் மூலம் பெற்றோர்கள் தங்கள் பணியிடங்களில் இருந்தே தங்களின் குழந்தைகளைக் கண்காணிக்கும் வகையில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக யுஜிசி செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி அனைத்துபல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் மகப்பேறு நலன் திருத்தச் சட்டத்தின்படி, 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாகவோ பொதுவாகவோ நிர்ணயிக்கப்பட்ட தொலைவுக்குள் குழந்தைகள் பராமரிப்பு மையத்துக்கான வசதியைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும்.
சிறப்பு திறன் குழந்தைகள்: இது தொடர்பாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மகப்பேறு நலன் சட்டத்தின் கீழ் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை அமைப்பதற்கும், நடத்துவதற்குமான தேசிய அளவிலான வழிகாட்டுதல்களை வகுத்து www.wcd.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி எந்தவொரு அலுவலக இடத்திலும், குடியிருப்புவளாகங்களிலும், பள்ளி, மருத்துவமனை போன்ற இடங்களிலும் தேவைக்கேற்ப குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைக்கப்படலாம்.
குழந்தை பராமரிப்பு மையங்களில் தண்ணீர் வசதியுடன் கூடிய சுத்தமான கழிப்பறை, கை கழுவும் தொட்டிகள், சோப்பு, கை கழுவும் திரவம் உள்ளிட்டவை தொடர்ந்து இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும். சிறப்புத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான வசதிகளும் இடம்பெற்றிருக்க வேண்டும்.
பராமரிப்பு மையங்கள் உள்ளேயும், வெளியேயும் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். தண்ணீர் சுத்திகரிப்புடன் கூடிய பாதுகாப்பான குடிநீர் வசதிகள் இருத்தல் வேண்டும்.
தகவல் பலகைகளில் அவசர எண்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். காப்பகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை உறுதி செய்வதற்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல பெற்றோர்கள், தங்களது பணியிடங்களில் இருந்தே சிசிடிவி கேமராக்கள் மூலம் தங்களது குழந்தைகளைக் கண்காணிக்கவும் அனுமதி வழங்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் குழந்தை பராமரிப்பு மையங்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்.
மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை உயர்கல்வி நிறுவனங்களும் தங்களது கல்லூரிகள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடைபிடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.