புதிய அமைச்சராகப் பதவியேற்ற திருமுருகனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை. உடன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர்.படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

புதுவை அமைச்சராக திருமுருகன் பதவியேற்பு: ஆளுநர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அமைச்சரவையில், என்.ஆர்.காங். சார்பில் காரைக்கால் நெடுங்காடு தொகுதியைச் சேர்ந்த சந்திரபிரியங்கா இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். அவர் வகித்த துறையின் பொறுப்பை முதல்வர் ரங்கசாமி கூடுதலாக ஏற்றார்.

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், கடந்த 1-ம் தேதிகாரைக்கால் வடக்கு தொகுதியைச்சேர்ந்த என்ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ திருமுருகனை அமைச்சராக நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து திருமுருகன் நேற்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசை, திருமுருகனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

அமைச்சராகப் பதவியேற்ற திருமுருகன், விழா மேடையில் முதல்வர் ரங்கசாமி காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். தொடர்ந்து, ஆளுநர் தமிழிசை, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சாய்சரவணக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, பேரவை துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள், பிரமுகர்கள், அரசுஅதிகாரிகள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில்,திருமுருகனின் தாயார், மனைவி, குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினரும் பங்கேற்றனர். புதிதாகப்பொறுப்பேற்ற அமைச்சர் திருமுருகனுக்கு துறைகள் ஒதுக்கப்படவில்லை. விரைவில்அவருக்கான துறைகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு: இந்நிகழ்வை எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். அதேபோல, ஆளும் கட்சியைச் சேர்ந்த, காரைக்கால் பகுதியின் மற்றொரு எம்எல்ஏவான சந்திர பிரியங்காவும் பங்கேற்கவில்லை. உள்ளாட்சித் துறை அமைச்சர் நமச்சிவாயம், வெளியூர் சென்றிருந்ததால் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT