காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை:
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய ஆட்சியில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டபோது தமிழகம் வராத பிரதமர், மக்களவைத் தேர்தலுக்காக 5-வது முறையாக தமிழகத்துக்கு வருகிறார்.
தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூ.37 ஆயிரம் கோடியில் ஒரு ரூபாய்கூட தரவில்லை. சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி உள்ளனர். எனவே, பிரதமர் மோடியைக் கண்டித்து, கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே இன்று நடைபெறும் பொதுக் கூட்டத்துக்கு அவர் வரும்போது, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் எஸ்.ராஜேஷ் குமார் தலைமையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இதில், விஜய் வசந்த் எம்.பி. மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.